![dolphin was found washed up on the beach at Rasa Pettai, Cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/8QVZeVWSCE---xaEXT42oduL064H4CGF9Yv-OKacYNQ/1700717219/sites/default/files/inline-images/993_309.jpg)
கடலூர் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம் தாழங்குடா, ராசா பேட்டை, அன்னங் கோயில், குமார பேட்டை உள்ளிட்ட 54 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு ராசாபேட்டை கடற்கரை ஓரத்தில் டால்பின் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. மேலும் அதன் மீது பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலைகள் இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக அந்த டால்பினை மீட்டு அதன் மீது இருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலையை நீக்கி மீண்டும் அதை தூக்கிக் கொண்டு கடலில் நீந்திச் சென்று நடுக்கடலில் கொண்டு விட்டு வந்தனர்.
பின்பு நீண்ட நேரம் கரையில் நின்று பார்த்தும் டால்பின் வரவில்லை. இதையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த டால்பின் மீன் ராசாப்பேட்டை கடற்கரை ஓரத்தில் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தது. இந்த டால்பின் சுமார் ஐந்து அடி அளவுக்கு இருந்தது. இதை மீனவர்கள் வந்து பார்த்து சென்றனர். இது குறித்து மீன்வளத் துறையினர் டால்பின் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.