தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கழக இளைஞர் அணியின் சார்பில் தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ''இளைஞர் எழுச்சிநாள் விழா'' கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திமுக இளைஞர் அணி சார்பில் வாகைக்குளம் விமான நிலையம் அருகில், எப்.சி.ஐ.குடோன் எதிரில், உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகில், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகில் என தனியாருக்கு சொந்தமான நான்கு இடங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 65 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இக்கொடிக்கம்பங்களில் 15அடி உயரம், 25அடி அகலத்திலான பிரம்மாண்டமான கழகத்தின் இருவண்ணக்கொடியை மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஏற்றி வைத்து, 2ஆயிரம் மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் 27ம்தேதி அதிகாலையில் அத்துமீறி நுழைந்து தனியாருக்கு சொந்தமான இடங்களில் முறையான அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்த திமுக கொடிகளை திடீரென்று அகற்றியது. இதற்கு தடை விதிக்ககோரி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் கழக இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் ''தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் முறையான அனுமதிபெற்று அமைக்கப்பட்டிருந்த திமுக கொடிகளை அகற்றுவதற்கோ, அதில் தலையிடுவதற்கோ தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை என யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து, திமுக கொடிக்கம்பங்களில் மீண்டும் கழக கொடி ஏற்றும் நிகழ்வு ஏப்ரல் 2ம்தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக இளைஞர் அணி துணைச்செயலளார் எஸ்.ஜோயல் தலைமை வகித்தார். மாவட்ட கலைஇலக்கிய அணி செயலாளர் சுரேஷ்குமார், பகுதிச் செயலாளர்கள் போல்பேட்டை பி.எஸ்.கே.மாரியப்பன், அண்ணா நகர் பி.பென்னி, முத்தையாபுரம் வி.எஸ்.கருணாகரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் துறைமுகம் புளோரன்ஸ், முன்னாள் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பில்லாஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.