"சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும், துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்" நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கங்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பொறியியல் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும், திட்டக்குடி எம்.எல்.ஏவுமான வெ.கணேசன் தலைமை தாங்கினார். நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றியக் குழு தலைவர் சபா.பாலமுருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தென்னரசு, பொறியாளர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயக்க வலியுறுத்தியும், சூரப்பாவை பதவிநீக்கம் செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
அதேசமயம் காவல்துறை அனுமதி பெறாமல் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக காடாம்புலியூர் காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டக்குடி கணேசன், நெய்வேலி சபா.ராஜேந்திரன் உள்ளிட்ட 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.