கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று தனது இணையத்தில் வெளியிட்டது. இந்த 1,582 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். என்.எல்.சி நிறுவனத்தில் இந்த தமிழர் விரோதப் போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்தின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் GET (Graduate Executive Trainee) காலிப் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வில் கலந்துகொண்ட ஒரு லட்சத்திற்கும் மேலானோரில், நேர்காணலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,582 நபர்களில், 99% வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், தமிழகத்தில் 1% நபர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படும் போது கடலூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழக இளைஞர்களை அடியோடு புறக்கணித்த என்.எல்.சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டித்து, எழுத்துத் தேர்வை ரத்துசெய்து நியாயமான முறையில், தேர்வு நடைபெற வலியுறுத்தி கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஓய்வு பெறும் பணியாளர்களின் இடம் காலியாக உள்ளது. அப்படி காலியாக உள்ள இடங்களில் பணி நியமனம் செய்யும்போது நிறுவனத்திற்காக நிலம், வீடு கொடுத்தவர்களுக்கும், பணியின்போது உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கும், பணிசெய்து ஓய்வுபெற்ற வாரிசுதாரர்களின் குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. என்.எல்.சியில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகப் பணி வழங்கப்படாமல் உள்ளது.
அதுபோலவே என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதால், அவர்கள் நியமிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், வட இந்தியாவைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், மனித வளம், நிதி உளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு என 259 பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று நிறுவன இணையத்தில் பட்டியல் வெளியிட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் என ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே தேர்வு செய்யய்யட்டுள்ளனர். இது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.
என்.எல்.சி நிறுவனத்தின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, ஆகவே என்.எல்.சி நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வை ரத்து செய்யவும், புதியதாக எழுத்துத் தேர்வை நடத்த வலியுறுத்தியும், அதில் தமிழக இளைஞர்களுக்கு, அதுவும் குறிப்பாக கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கும், என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கும், ஓய்வுபெற்ற குடும்பங்களின் வாரிசுகளுக்கும், என்.எல்.சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டி, நாளை (09.02.2021) அன்று காலை 9.00 மணி அளவில் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 8, பெரியார் சதுக்கம் அருகில் கடலூர் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதே சமயம் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளர் அணி, மகளிரணி, தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகிய அணிகளின் நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.