திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஒரு ஆடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில் இருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க.வின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் சொத்து பட்டியல் குறித்தும், அவரது மகனும் தி.மு.க.வின் மருத்துவரணி மாநில துணை தலைவருமான டாக்டர். கம்பன் குறித்தும் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. வீடியோ தொலைக்காட்சிகள் சிலவற்றிலும், சில செய்தித் தாள்களிலும் வெளியாகி சூடாக விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 6- ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, "சில இணைய தளங்களில், தொலைக்காட்சிகளில் ஒரு ஆடியோ ஒளிப்பரப்பாகிறது. அது முற்றிலும் பொய்யான தகவல்களைக் கொண்டது. நான் தி.மு.க.வுக்கு வருவதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறேன். பின் தங்கிய மாவட்டமான இங்கு மக்கள் கல்வி வளர்ச்சிப் பெற வேண்டும் என்பதற்காக அறக்கட்டளை வழியாக அந்த கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு ஏழைகள் கல்வி நிலை உயர பாடுபடுகிறது. இந்தியன் வங்கியில் 130 கோடி ரூபாய் கடன் வாங்கி மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது.
எனக்கு ஸ்பின்னிங் மில் இருக்கிறது, பைனான்ஸ் வைத்திருக்கிறேன் எனச்சொல்வதும் பொய். தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது எனச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என் மீது வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக 11 லட்ச ரூபாய் கணக்கு காட்டவில்லை, இந்த நிதி எப்படி வந்தது என வழக்கு தாக்கல் செய்ய வைத்தார். அது சென்னையில் உள்ள என் வீட்டில் என் உதவியாளர், கார் ஓட்டுநர் தங்குவதற்காக அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், அதனை கணக்கு காட்டியுள்ளேன் என கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அது மேல்முறையீடாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று அங்கும் விடுவிக்கப்பட்டேன். எனக்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றவர்கள். நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது பொதுவிநியோக திட்டம் தமிழகத்தில் செயல்படும் முறையை உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டினார்கள்.
பொதுவாழ்க்கையில் நேர்மையாக, மக்கள் தொண்டாற்றும் வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், மதத்திற்கு அப்பாற்பட்டு அருணை தமிழ் சங்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்காலம் சொன்னது போல் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தூய்மை அருணை திட்டம், மாணவர்களுக்கு தளபதி (ஸ்டாலின்) பெயரில் இலவச கணினி மையம், இலவச தையல் பயிற்சி மையம் நடத்திக் கொண்டு வருகிறேன். தீப திருவிழாவிற்கு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு, தங்குமிடம் வழங்கி வருகிறோம். பொது வாழ்க்கையில் தூய்மையாக இருக்கிறேன்" என்றார்.
ஆடியோவில் பேசிய தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறதே என நாம் கேள்வி எழுப்பிய போது, "அதுப் பற்றி எனக்கு தெரியாது" என்றார்.