Skip to main content

ரேஷன் அரிசி அளவைக் குறைத்து அரசுப் பணத்தில் அ.தி.மு.க.-வுக்கு விளம்பரமா? – ஐ.பெரியசாமி கேள்வி...

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

I. Periyasamy


ரேஷன் கடையின் மூலம் மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் என்ற பெயரில் அ.தி.மு.க. கட்சி சார்பாகக் கொடுத்து அரசுப் பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொண்டுள்ளார்கள் என்றும் மக்கள் பசியில் வாடும் போது ரேஷன் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், ஐ.பெரியசாமி, தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையில் கூறியதாவது. 


"கரோனா கால கட்டத்தில ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசு வழக்கமாகக் கொடுத்து வந்த அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் முறையாகச் செயல்பாட்டில் இல்லை. ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்கள் வாழ்வாதாரம் இன்றி இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு கூடுதலாகக் கொடுப்பதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஏற்கனவே வழங்கி வந்த அரிசியையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 01.11.2016 அன்று தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரிசி அளவுகளில் சில மாற்றங்களைச் செய்ய சொன்னது. மத்திய அரசு முன்னுரிமை குடும்பங்களுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என்று தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு முன்னுரிமை குடும்பங்கள் மற்றும் முன்னுரிமை அல்லாத குடும்பங்கள் என அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்குவோம் என்றார் ஜெயலலிதா. ஆனால் அதன்படி அரிசி கொடுக்கவில்லை.


தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை பிரிவில் அப்பாவி ஏழை தொழிலாளிகள் பலர் உள்ளனர். முன்னுரிமை குடும்ப அட்டைகளில் செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் உள்ளனர். குடும்ப அட்டைகளில் உள்ள குளறுபடிகளைச் சமாளிக்க முடியாமல் இந்த அரசு திணறி வருகிறது. குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க வேண்டும் ஆனால் தமிழக அரசு வழங்கவில்லை. ஏப்ரல், மே, மற்றும் ஜீன் மாதங்களில் ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசியின் அளவை மாற்றியது. தமிழக அரசு ஏப்ரல் 27ஆம் தேதிதான் அந்த அரசாணையை வெளியிட்டது. ஆனால் அந்த அளவின் படி ஏப்ரல் மாத அரிசி மக்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குள் ஏப்ரல் மாதத்திற்குரிய பொருட்கள் பழைய முறையில் வழங்கப்பட்டன.


ஏப்ரல் மாத ஒதுக்கீடு அரிசியை மே மாதம் 50 சதவீதமும், ஜீன் மாதம் 50 சதவீதமும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார்கள். இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்து பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டும் என்று கூட்டுறவுப் பதிவாளர் ஆணை பிறப்பித்தார். ஆனால் எந்தக் கடையின் முன்பும் பிளக்ஸ் போர்டு வைக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் கொடுக்காமல் விட்ட அரிசியை மீண்டும் ரேஷன்கடையின் மூலம் மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் என்ற பெயரில் அ.தி.மு.க. கட்சி சார்பாக கொடுத்து அரசுப் பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொண்டார்கள்.


பல மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல் ரேஷன் அரிசியைக் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டார்கள் எனப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது அராஜகத்தின் உச்சமாக உள்ளது. மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியை அமைச்சர்கள் கைப்பணம் செலவழித்துக் கொடுப்பது போல் ஆதாயம் தேடி வருகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கரோனா ஊரடங்கு காலத்தில பசி பட்டினியுடன் வாழும் ஏழை மக்களுக்கு மே, ஜீன் மாதம் கொடுக்க வேண்டிய 50 சதவீத அரிசியை இன்று வரை கொடுக்கவில்லை. ஜனநாயக முறைப்படி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியைக் கொடுக்காமல் அவர்களுக்குத் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது.


நான்கு நபர் உள்ள குடும்பங்களுக்கு 20 ப்ளஸ் 20 என 40 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 8 நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு 20 ப்ளஸ் 40 என 60 கிலோ அரிசி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 4 நபர் கார்டுகளுக்கும் 8 நபர் கார்டுகளுக்கும் 40 கிலோ அரிசி தான் வழங்குவோம் என அறிவித்திருக்கிறார்கள். இது கரோனா ஊரடங்கு காலத்தில் பசி, பட்டினியுடன் வாழும் சாமானிய மக்கள் மீது செலுத்தப்பட்ட வன்முறை ஆகும். இதை உடனடியாகச் சரி செய்து முறையான அரிசி வழங்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp


இது போல நபர் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். தற்போது ரேஷனில் கொடுக்கப்படும் துவரம்பருப்பு மத்திய அரசு கொடுத்ததா? மாநில அரசு கொடுத்ததா? எனத் தெரியவில்லை. மத்திய அரசு கொடுத்த துவரம்பருப்பு என்றால் மாநில அரசு ஏற்கனவே வழங்கி வந்த துவரம்பருப்பு எங்கே போனது? என்னவானது?


தமிழக அரசு மார்ச் மாதம் முதல் பொது விநியோக திட்டத்தில் நடைபெற்ற விநியோகம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். கரோனா காலத்திலும் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியில் முறைகேடு செய்யும் தமிழக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தொடர்ந்து மக்களை வதைக்காமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்