முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (28-02-24) உயிரிழந்தார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடம் சிறையில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தியிருந்தது.
சாந்தன் உயிருடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன் வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார்.
அப்போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘கடந்த 22ஆம் தேதி சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதனையடுத்து, ‘சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ ரீதியாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.