மகாத்மா காந்தியின் 150- வது பிறந்தநாள் தின நிறைவு விழாவையொட்டி காங்கிரஸ் சார்பில் வருகிற 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை நடக்க இருக்கிறது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், மாநில செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி உட்பட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, நாங்குநேரி காங்கிரஸ் கோட்டை அங்கு புதிய விடியல் மலர வேண்டும். கூட்டணியில் அந்த தொகுதியை காங்கிஸுக்கு ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் திமுக காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும். நாட்டில் இருப்பவர்கள் தேசத்தின் பொருளாதரம் சரிந்தது ஏன்? என எண்ணி பார்க்க வேண்டும். எல்ஐசி பங்குகளை பாஜக ஆதரவாளர்கள் நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
பாஜக அரசு எல்லா விவகாரத்திலும் தவறான பொருளாதர கொள்கையை கொண்டுள்ளது. இந்திய அரசாங்கமே திறமையற்ற அரசாங்கமாக உள்ளது. வைகோ மதிப்பு மிக்க தலைவர் அவரை தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் அழைக்கும். இந்தியா தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துள்ளது. பண விநியோகத்தை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தை பாஜக கையகப்படுத்தியுள்ளது. திமுகவின் போராட்டத்துக்கு பயந்து தான் அமித்ஷா ஒரே மொழி என்ற கருத்தை மாற்றி கொண்டார் என கூறலாமே தவிர ஸ்டாலின் பயந்தார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுவது ஏற்க கூடியதல்ல. திமுகவும் காங்கிரசும் பொறுப்பான எதிர்கட்சிகளாக செயல்படுகின்றன.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் தொடர்ந்து பேசிய, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். அதற்கு காங்கிரசார் பாடுபட வேண்டும் என்றார். இதற்கு கூட்டத்தில் இருந்த காங்கிரசார் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க காங்கிரசார் பாடுபட்டு கொண்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் காங்கிரஸ் கூட்டத்தில் ஸ்டாலின் முதல்வராக பாடுபட வேண்டுமென்று எப்படி கூறலாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.