தமிழகத்திலே நடக்கின்ற வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பதாக தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 04.07.2018 புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்திலே எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுகொண்டேபோகிறது. தமிழகத்திலுள்ள மத்திய அமைச்சர் அவர்களே “தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது” என்று குற்றம்சாட்டுகின்ற அளவிற்கு தமிழகம் சீர்கெட்டுக்கிடக்கின்றது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவதற்காக எடப்பாடி தலைமையிலான அரசு, கமிஷன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், நெடுஞ்சாலை துறையில் ஊழல், பொதுப்பணித்துறையில் ஊழல் என்று தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் தங்களுடைய ஆட்சியிலே ஊழல் மலிந்துகிடக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதைப்போல, எத்தனை சதவிகிதம் கமிஷன் வாங்குவது எப்படி என்பதைப் பற்றி தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் பொது நிகழ்ச்சிகளில் விவாதித்துக்கொள்வதை ஊடகங்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும், பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே தமிழகத்திலே நடக்கின்ற வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்திட எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த மத்திய அரசின் நடவடிக்கையினால், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர அனைத்துத்தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
மத்திய அரசு சென்ற ஆண்டு GST வரியை கொண்டுவந்த போது, பெட்ரோல், டீசல் GST வரிக்குள் கொண்டுவந்திருந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டிருக்காது. உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டுவரவேண்டுமென்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் உள்ள தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற மத்திய அரசின் திட்டத்தையும், இந்திய திருநாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தகுந்த தரமான சிகிச்சை பெறுகின்ற வழியில் மத்திய அரசு அமல்படுத்த இருக்கின்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் இச்செயற்குழு வரவேற்கிறது.
சிறந்த சிகிச்சை என்பது மருத்துவர்களின் சேவையினால் மட்டுமல்லாது, போதிய நிதி வசதியுடன் அமைந்திட வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சிகிச்சைக்கான நிதி போதுமானதாக இல்லை என்பதுடன், மிகவும் குறைந்த மதிப்பீட்டில் உள்ளது. இது தரமற்ற சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்பதுடன், சிகிச்சைக்கான செலவுத்தொகையை உயர்த்தி, தரமான சிறந்த சிகிச்சை வழங்கிட மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
விவசாய பயிர் பாதுகாப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்தி, முழுபயனையும் விவசாயிகளுக்கு விரைந்து உடனடியாக கிடைத்திட ஆவண செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, டீசல் மீதான வரி குறைப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, இந்தியா முழுவதும் உள்ள 68 லட்சம் லாரி உரிமையாளர்கள் ஜூலை 20 ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் ஏற்றிச் செல்லுகின்ற டேங்கர்லாரிகள் கூட இப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை உடனடியாக அழைத்து பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
சென்னையில் நடைபெற்று வந்த அம்பேத்கார் சட்டக்கல்லூரியை திருப்போரூர் அருகே புதுப்பாக்கத்திலும், மேலும் திருவள்ளூர் பட்டறை பெரும்புதூரில் புதிய அரசு சட்டக்கல்லூரி திறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டில் புதிதாக சேருகின்ற சட்டக்கல்லூரி மாணவர்களை புதிதாக திறக்கப்பட்ட சட்டக்கலூரியில் சேர்த்திடவும், ஏற்கனவே சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை அவர்கள் படிப்பு முடியும் வரை புதிய கல்லூரிக்கு மாற்றாமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், புதியதாக திறக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி, உணவு வசதி, போன்ற அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.