2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.
மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.