நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர இயக்குநர் விசு முடிவு செய்துள்ளார்.
கே.பாலசந்தரின் கவிதாலயா பட நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது நெற்றிக்கண். ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ், நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கான முதற்கட்ட வேலைகளும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்வதற்கு இயக்குநர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து, “நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் தனுஷ் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும். என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்”என்று தெரிவித்துள்ளார்.