Skip to main content

அண்ணே... அவர் நல்லாயிருக்காரு... திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் ராஜன் செல்லப்பா அதிர்ச்சி

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
dindigul srinivasan



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கையில் கட்டுப் போட்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.
 

விழாவில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ராஜன்செல்லப்பாவை வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... எழுந்தாலும்ஆயிரம் பொன்... என்று குறிப்பிட்டதால் அனைவரும் சிரித்தார்கள். தொடர்ந்து பேசும்போது, அதுபோல உடல் நலக்குறைவால் மறைந்திருந்தாலும் புறநானூற்று வீரர் போல ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உற்சாகமாக எழுந்து வந்து விட்டார் என்றதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 
 

“மறைந்திருந்தாலும்” என்ற வார்த்தையை திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டது அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேடையில் இருந்த அமைச்சர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அனைவரும் ராஜன் செல்லப்பாவை பார்த்தனர். அப்போது கீழே இருந்த கட்சியினர் அண்ணே... அவர் நல்லாயிருக்காரு.. என கத்தினர்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.... இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் என்பதுதான் பழமொழி. ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்” என்று பழமொழியை மாற்றி பேசியதாலும் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்