'தவெக விஜய்யால் நாடகம் மட்டும்தான் போட முடியும்' என திண்டுக்கல் லியோனி விமர்சனம் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கண்டங்கள் குவிந்து வரும் நிலையில் அமித்ஷாவை கண்டித்து திமுக போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார்.
போராட்டத்தில் லியோனி பேசுகையில், ''அமித்ஷா பேசியதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால் கோபப்பட்டிருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சட்டமன்றத்தில் கோபப்படும் எடப்பாடி பழனிசாமி, ''திமுக பாராளுமன்றத்தில் பேசி இருக்க வேண்டும்'' என சட்டமன்றத்தில் அந்த சத்தம் போடும் எடப்பாடி பழனிசாமி, அம்பேத்கரை ஒருவர் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் நீங்க என்ன நினைக்கிறீங்க எனக் கேட்டால் ''அது வந்து ஜெயக்குமார் பதில் சொல்லி இருப்பார். அவர்தான் எனக்கு பதிலா பேசிட்டாரே'' என சொல்கிறார். ஜெயக்குமார் பதில் சொல்வார் என்றால் நீங்க எதற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள். கட்சியினுடைய தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் முதல்வருக்கு சமமான அந்தஸ்து பெற்றவர். இந்திய அளவில் ஒரு பிரச்சனை வந்திருக்கிறது எனக் கருத்துக் கேட்டால் அதற்கு கருத்து சொல்ல துப்பில்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் லியோனியிடம் செய்தியாளர்கள் 'நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் கொள்கைத் தலைவராக அம்பேத்கரை வைத்துள்ளார். ஆனால் டிவிட்டரில் மட்டும் ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு வருகிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த லியோனி, ''அவர்கள் ட்விட்டரில் தான் ஆட்சி நடத்த முடியும். கட்சியே அப்படித்தான் நடத்த முடியும். காரணம் இது மாதிரி போராட்டத்தை, ஆர்ப்பாட்டத்தை அவர்களால் ஏற்பாடு பண்ண முடியாது. இதுபோன்ற அறிக்கை விடுத்து நானும் மத்திய அரசை எதிர்க்கிறேன் என்று நாடகம் தான் அவரால் போட முடியும். ஏற்கனவே நான் சொன்னது போல் பாஜகவினுடைய இன்னொரு அணி தான் தவெக. திமுகவை எதிர்ப்பதற்காக பிஜேபியால் உருவாக்கப்பட்ட ஒரு அணிதான் அந்த புதிய கட்சி''என்றார்.