'டார்ச் லைட்' இல்லையென்றால், 'கலங்கரை விளக்கம்' கேட்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (14/12/2020) தேர்தல் பிரச்சாரம் செய்தார். வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஆழம் காலனி ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அந்தப் பகுதிகளில் திரண்டிருந்த மக்கள் மலர்களைத் தூவி கமலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "இந்திய ஜனநாயகம் தற்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதனால் தான் என்னவோ நமது கட்சியில் டாக்டர்கள் அதிகமாகவே உள்ளனர். எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் போடும் ஊசி வித்தியாசமாக இருக்கும். அது நல்லவர்களுக்கு வலிக்காது கயவர்களுக்கு வலிக்கும். மேலும், செல்லும் ஊர்களில் எல்லாம் ஊசி போட வேண்டியது உள்ளது. சிலருக்கு அது வலிக்காது. அதற்கு நான் என்ன செய்ய முடியும். கடந்த 50 வருடங்களாக நமக்கு வலிக்கவில்லையா, திண்டுக்கல் மக்கள் நினைத்தால் கத்தி இன்றி ரத்தம் இன்றி துப்பாக்கி இன்றி புரட்சியை ஏற்படுத்த முடியும்.
அதன் புரட்சியின் பொறுமையாக நான் இருக்க விரும்புகிறேன். உங்களின் கருவியாக நான் இருக்க விரும்புகிறேன். நமக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். டார்ச் லைட் இல்லையென்றால் கலங்கரை விளக்காவோம். எங்களுடைய சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் ஆக்குவது இவர்கள் தான். நாம் ஆட்சியில் அமர்ந்தால் மக்கள் தைரியமாகக் கேள்வி கேட்க உரிமை வழங்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் நமது கட்சிக்கு உண்டு. ஆட்சியில் பல மாற்றங்கள் செய்யக் காத்திருக்கிறோம். அதற்கு வெகு நாட்கள் காத்திருக்க வைக்க மாட்டீர்கள் என்பதற்கான சாட்சிகளும் தெரிகிறது.
நமது வெற்றிக்கான பாதை கண்முன் தெரிகிறது. எனவே பராக்குப் பார்த்துக்கொண்டு பாதையை விட்டு விடாதீர்கள். கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு தர்மவான் போன்று (தேர்தலில்) மக்களிடம் ஐந்தாயிரம் ஐந்தாயிரம் கொடுக்கிறார்கள். மக்களை அவர்களிடமே விற்கிறார்கள். அரசு அமைந்தால் தேர்தலுக்குப் பின்னர் அந்த ஐந்தாயிரம் 5 லட்சமாக அல்ல 50 லட்சமாக மாறும். அதைப் புரிந்து கொண்டால் தேர்தலில் காசு வாங்க மாட்டீர்கள், நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அவ்வாறு தெரிந்தும் கொள்ளையர்கள் கையில் ஆட்சியைக் கொடுக்கிறார்கள். அதற்கு தேர்தல் நேரத்தில் மக்கள் திசை திரும்புவதே காரணம். ஆனால் நேர்மை மட்டுமே எங்களின் முதலீடு" இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.