கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையின் விழிப்புணர்வு கண்காட்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை வடவள்ளி பகுதியில் அமமுக, அதிமுக மோதல் நடைபெற்ற போது, நான் ஊரில் இல்லை. கலகம் விளைவிக்கும் வகையில் அமமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். இதுபோல மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எது நடந்தாலும் எங்கள் மீது பழி சுமத்துவதே டிடிவி தினகரனின் வழக்கம். ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் கட்சியை கைப்பற்ற டிடிவி தினகரன் நினைத்தார். நான், தங்கமணி, ஜெயக்குமார், முதலமைச்சர் உள்ளிட்ட 5 பேர் கட்சியில் இருந்து விலக்கி வைத்ததால் எங்கள் மீது டிடிவி தினகரன் கோபத்தில் உள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து பேச ஸ்டாலின் மற்றும் திமுகவிற்கு அருகதை கிடையாது. காவிரி பிரச்சனையில் துரோகம் செய்தது திமுக தான். காவிரி பிரச்சனையில் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். காவிரி தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி முயற்சியால் தான் கிடைத்தது. ஆனால் கர்நாடகா தான் தண்ணீர் திறந்து விடவில்லை. காவிரி நதி நீரை பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சி வெற்றியடையும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.