கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மரக்காணம் காவல நிலைய ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர காவல் ஆணையர்கள், மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்ளிட்டோருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஆய்வகங்களுக்கு பயன்படுத்தக் கூடிய மெத்தனால் வெளியே செல்கிறதா என கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர் மாவட்ட எஸ்.பியின் உத்தரவின் பேரில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு 22 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.