
பாளையங்கோட்டை நாங்குநேரி வாகைகுளத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் முத்துமனோ, களக்காடு காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவல் விசாரணையில் இருந்த முத்துமனோ, விசாரணை முடிந்து ஏப்ரல் 22 ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்கள் உதவியுடன் சிலர் முத்துமனோவை ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்தும், சிறைத்துறை அதிகாரிகள் கண்துடைப்பாக பணிநீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதி கேட்டும், படுகொலை செய்த குற்றவாளிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீஸார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறி கடந்த 68 நாட்களாக அப்பகுதியினர் இறந்த முத்துமனோ உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவிற்கு நீதி கேட்டும், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை நிறுவனத்தலைவர் ராமர்பாண்டியர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.