
மதுரையில் கோவில் திருவிழாவில் ஒரு தரப்பு மக்கள் பொங்கல் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது. பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. திருவிழாவை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 9 வருடங்களாக வருவாய்த் துறையால் அக்கோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த தனி நீதிபதி கடந்த 2012 ஆம் ஆண்டு கொடுத்த உத்தரவின் அடிப்படையில் தினசரி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இரு சமூகத்தின் சார்பிலும் 'அனைவரும் சமம் உரிமையுடன் கோவிலில் வழிபடுவோம்; தல விருட்ச மரத்தை வழிபடும் விவகாரத்திலும் புதிய முறைகளை புகுத்த மாட்டோம்' என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு சமூக மக்கள் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக பொங்கல் படைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த தரப்பினர் கோவில் முன்பு பொங்கல் வைப்போம் எனக் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மூன்று கட்டமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாததால் காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி ஒரு பிரிவினர் பொங்கல் வைக்க ஊர்வலமாக செல்வதால் கோவில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.