தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெய்யும் ஒன்று. கேஸ் சிலிண்டர் பயன்படுத்தாத குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் 5 தேதிக்குள் மண்ணெணய் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் விறகு அடுப்பை நம்பி வாழும் பொதுமக்களின் நிலை பெரிய கேள்விகுறியாகி உள்ளது. நியாயவிலை கடைகள் மூலம் வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் வழங்கப்பிடவில்லை.
இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் தரப்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்த 1 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியா் மாவட்ட நுகா்பொருள் விநியோக அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டு திருச்சியில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் மண்ணெண்ணெய் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இருப்பு இல்லாத இடங்களில் உடனடியாக லாரிகள் மூலம் மண்ணெண்ணெய் அந்தந்த குறிப்பிட்ட விநியோக மையங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார். மண்ணெண்ணெய் அட்டை தாரர்களுக்கு இரண்டு தினங்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா்.