தீபாவளி போனஸ் கேட்டு தீபாவளி அன்றே வேலைநிறுத்தம் செய்யும் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் 108-ஆம்புலன்ஸ் பணியாளர்கள்! இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, 108-ஆம்புலன்சை நடத்தும் ‘ஜிவிகே எம்ரி’ நிறுவனம், பணியாளர்களின் நியாயமான உரிமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.
இது குறித்த அவரது அறிக்கை: ‘’தமிழ்நாடு முழுவதும் இயங்கும் 108-ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 968. இவற்றில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் மற்றும் கால் சென்டர் ஊழியர் என 4500க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 1000க்கும் மேல் பெண் ஊழியர்கள். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் மற்றும் ஊக்கத்தொகைக்காக கோரிக்கை வைப்பது வாடிக்கையாகியிருக்கிறது.
கடந்த 2016 - 2017ஆம் ஆண்டு போனஸ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ. 6300 அரசு தலையிட்டுத்தான் பெறப்பட்டது. அப்போது தீபாவளி நாளில் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்த பின்தான் அரசு தலையிட்டு அதனைப் பெற்றுத் தந்தது. இந்த ஆண்டும் அதுபோன்ற நிலைதான் உருவாகியிருக்கிறது. இந்த ஆண்டு, விலைவாசி நிலவரத்தைக் கணக்கில் கொண்டு ரூ.10,200 போனஸ் மற்றும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் இதுவரை பணியாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவேயில்லை. எனவே தீபாவளி அன்று ஒரு நாள் அதாவது வரும் 5ந் தேதி இரவு 8 மணியிலிருந்து 6ந் தேதி இரவு 8 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வேறு எந்த நாளையும்விட அன்று ஆம்புலன்ஸ் சேவை கட்டாயத் தேவையாகும்; ஆகவே அன்று 108-ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம் எக்காரணத்தைக் கொண்டும் கூடாது. ஆனால் 108-ஆம்புலன்சை நடத்தும் ‘ஜிவிகே எம்ரி’ நிறுவனத்திற்கு அந்தப் பொறுப்புணர்ச்சி இருப்பதுபோல் தெரியவில்லை; இருக்குமானால் பணியாளர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தியிருக்காது.
பணியாளர்களுக்கும் இந்தப் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்; ஆனால் 24 மணி நேரமும் பணியாற்றியும் போதிய ஊதியம் இல்லாத நிலையிலேயே அவர்கள் பண்டிகைப் போனசை எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் தீபாவளி அன்றே வேலைநிறுத்தம் செய்யும் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை ‘ஜிவிகே எம்ரி’ நிறுவனமும் தமிழ்நாடு அரசுமே உணர வேண்டும்.
இந்நிலையில் பணியாளர்களின் கோரிக்கை தொழிலாளர் நல ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று (30.10.2018) தொழிலாளர் துறை ஆணையர் தலைமையில் தீபாவளி போனசுக்கான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் தீர்வு எட்டப்படாததால் இன்று (01.11.2018) மாலை 4.00க்கு மீண்டும் பேச்சு நடைபெறும் என்ற நிலையில் இப்பிரச்சனை உள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையின்போது பணியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நல்ல முடிவை எட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
தமிழ்நாடு அரசு தலையிட்டு, 108-ஆம்புலன்சை நடத்தும் ‘ஜிவிகே எம்ரி’ நிறுவனம், பணியாளர்களின் நியாயமான உரிமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.’’