Skip to main content

மூத்த படைப்பாளி இயக்குனர் மகேந்திரன் மறைவு தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு-சீமான்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

உடல்நலக்குறைவால் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில்  5 மணிக்கு நடைபெற இருக்கிறது.  சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

mahendran

 

நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதைசொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல்  நாடகப் பாணியிலான  திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை.

 

கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.

 

தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் ‌. சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.

 

mahendran

 

தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

 

 

சார்ந்த செய்திகள்