சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி நாளை (18.10.2024) நடைபெறும் இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொது மக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அழைப்பிதழில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க அனைவரையும் மனமார வரவேற்கின்றோம். இடம் : தொலைக்காட்சி நிலைய அரங்கம்-1, 5, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம். சென்னை-600 005. நாள்: அக்டோபர் 18 (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயலுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் மத்திய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது. இது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்தத் திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மத்திய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி (19.01.2024) புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட டிடி தமிழ் ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார். அப்போது தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பான டிடி பொதிகை, ‘புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள்’ என்ற வாசகத்துடன் ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.