வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று, தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 250 நபர்களுக்கு செல்போன்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உரியவர்களிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், வேலூர் மாவட்டத்தில் அதிக அளவில் செல்போன்கள் திருடு போவதாக, காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அறிந்த மாவட்ட காவல்துறை செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக செல் டிராக்கர் என்ற Google from -ஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தால், கூகுள் பாஃமைப் பயன்படுத்தி தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 922 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை மூலம் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பழுதடைந்த
சிசிடிவி கேமராக்களை கண்டறிந்து அவற்றினை மாற்றுவதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில், கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதை அறிந்து அப்பகுதிகளில் நேரடியாக சென்று கள்ளச்சாராயத்தைக் கண்டறிந்து அழிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், பல்வேறு சோதனை சாவடிகளில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.