Skip to main content

மதுவில் சயனைடு; இருவர் உயிரிழப்பு - தஞ்சையைத் தொடர்ந்து மயிலாடுதுறையிலும் பரபரப்பு

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

Cyanide in alcohol; two people lost their lives - excitement again in Mayiladuthurai

 

மயிலாடுதுறையில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட தட்டங்குடி மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பழனி குருநாதன். கொள்ளுப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கொள்ளுப்பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் நண்பர்கள் போல் பழகி வந்த நிலையில் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர். அப்போது மது அருந்திய சில மணி நேரத்திலேயே இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மது அருந்தியதால் தான் இருவரும் உயிரிழந்தார்கள் என உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் இருவர் உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முதல் கட்டமாக அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்துள்ளது தெரியவந்துள்ளது. எந்த கடையில் வாங்கப்பட்ட மது எனவும் சயனைடு கலந்தது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையைத் துவங்கியுள்ளார்கள். அண்மையில் தஞ்சையில் இதேபோன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது மயிலாடுதுறையில் நிகழ்ந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்