Skip to main content

உறவினர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

cuddalore district government hospital incident investigation underway

 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் உடல்நலக்குறைவால் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உடல்நலக்குறைவால் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதில், ஜாகீர் உசேனுக்கு கரோனா உறுதியான நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (13/04/2021) உயிரிழந்தார். அதேபோல், ஆறுமுகமும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதில், ஜாகீர் உசேன் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உறவினர்களிடம் இன்று (14/04/2021) காலை ஒப்படைப்பட்டது. அந்த உடலைக் கொண்டு சென்று இஸ்லாமிய முறைப்படி பெருமாத்தூர் பகுதியில் அடக்கம் செய்தனர். தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்த ஆறுமுகத்தின் உறவினர்கள், அவரின் உடலைப் பெற்றுச் சென்றனர். அப்போது புதுப்பேட்டையில் மூடப்பட்டிருந்த உடலைத் திறந்து பார்த்தபோது, அது ஆறுமுகத்தின் உடல் இல்லை எனத் தெரிய வந்ததை அடுத்து, அந்த உடலை மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்பு இந்த உடல் ஜாகீர் உசேன் என்பது தெரிய வந்தததை அடுத்து உடலை அவரது உறவினர்களிடம் மருத்துவமனை ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, ஜாகீர் உசேனின் உடலையும் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தனர்.

 

இந்நிலையில், ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுக்க பெருமாத்தூர் சென்ற அவரது உறவினர்களுக்கு ஜாகீர் உசேன் குடும்பத்தினர் அனுமதி அளித்த நிலையில் அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு மருத்துவமனையின் இணை இயக்குனர் ரமேஷ், "உறவினர்கள் அடையாளம் கண்ட பிறகே இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலைத் தவறுதலாக ஒப்படைத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

அரசு மருத்துவமனையில் இறந்த இருவரின் உடல்கள் தவறுதலாக வெவ்வேறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

 

சார்ந்த செய்திகள்