கடலூர் மாவட்டத்தில் வங்கக் கடலில் கலக்கும் ஆறுகளில் ஒன்று தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு கடலில் கலப்பதற்கு சுமார் 5 கிலோ மீட்டருக்கு முன்பாக ஆல்பேட்டை அருகே பாலத்தின் கீழ் தடுப்பணையில் தேங்கும் கடல் நீரால் அப்பகுதி சுற்றிலும் நிலத்தடி நீர்மட்டம் சுமாராக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஆற்றில் பல வகை மீன்கள் செத்து மிதந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் ஆற்றில் பாய்வதால் மீன்கள் செத்து மிதந்ததாக பொதுநல அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகளை எழுப்பின. மேலும் பல ஆண்டுகளாக கடலூர் நகரத்தில் உள்ள வீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வகை கழிவுகளும் கொட்டிவரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதும் தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் மீன்கள் செத்து மிதப்பதால் தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் தண்ணீரில் கலந்துள்ளதா? என மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
மேலும் இது போன்ற சம்பவம் தொடர்ந்தால் கடலூர் நகரம் முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படுவதோடு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கிறேன்.