Skip to main content

இது எங்க பூமி...! -மனிதர்களை துரத்திய யானைகள் சொல்லும் செய்தி...!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப் பகுதி வழியாகத்தான் தமிழகம் கர்நாடகாவை இணைக்கும் சத்தியமங்கலம் -  மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பாதையில் மலை மீது செல்ல 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. 

 

சென்ற சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள் இரவு நேரத்தில் அதிக அளவு நடமாடுகிறது. இன்று அதிகாலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் அங்கு உலவிக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களை அந்த யானை துரத்துவதற்கு முயற்சி செய்தது. யானையின் அருகே சென்று நின்ற ஒரு காரை யானை துரத்தியதால் காரில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தார்கள். திடீரென காரின் முன்புறம் நோக்கி வந்த யானை காரின் முன்பகுதியில் முட்டியது. இதனால் கார் கவிழ்ந்தது. பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் இதைக்கண்டு வாகன ஒலி எழுப்பி உடனடியாக யானையை துரத்தினார்கள். பிறகு கவிழ்ந்து கிடந்த காரை தூக்கி நிறுத்தி அந்த காரில் இருந்தவர்களை காப்பாற்றினார்கள். 


 

நின்ற நிலையில் கார் கவிழ்ந்ததால் காரில் வந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. சிறிது தூரத்தில் நின்று அதை தனது குட்டியுடன் வேடிக்கை பார்த்தது யானை. மலைப்பாதையில் யானைகள் தொடர்ந்து வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
 

காட்டு யானைகள் காட்டில் தான் வாழ்கிறது. மனிதர்கள் தான் அந்த காட்டை ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால் கோபமடையும் யானைகள் தங்கள் பகுதிக்கு வரும் வெளிநபர்களை துரத்தி எதிர்ப்புக்களை காட்டுகிறது.


 

சார்ந்த செய்திகள்