Skip to main content

பயிர் காப்பீடு செய்ய மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் இ-சேவை மையங்கள்; கால நீடிப்பு செய்ய சி.பி.எம். கோரிக்கை...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
Crop

 

 

பிரதம மந்திரியின் திருந்திய பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய கூட்டுறவு சங்கங்களும், அரசு இ-சேவை மையங்களும் மறுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் விடுத்துள்ள அறிக்கையில், “2020-21ஆம் ஆண்டு கார் பருவத்திற்கு நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, சோளம், கம்பு, எள், வெண்டை ஆகிய ஒன்பது பயிர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறிவிக்கை செய்தும், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

நெல் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, எள், வெண்டை ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இறுதிநாள் 31.07.2020 எனவும், சோளம், கம்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் 15.08.2020 என மாவட்ட ஆட்சியர் கடந்த 21-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேற்படி காப்பீடு நிறுவனமும் நாளிதழ்களில் விளம்பரம்  வெளியிட்டு இருந்தது.

 

பயிர்க் கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பயிர் காப்பீட்டுதிட்டத்தில் பதிவுசெய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் காப்பீட்டுநிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் மற்றும் வணிகவங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குபின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், விவசாயிகள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களை அணுகினால் இங்கே காப்பீட செய்ய முடியாது. பொது இ-சேவை மையத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனர். பொது இ-சேவை மையத்திலோ சம்மந்தப்பட்ட வேளாண்மை  கூட்டுறவு சங்கங்களுக்கு செல்லுமாறு விரட்டியடிக்கப்படுகின்றனர். தனியார் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. ஓரிரு மையங்களில் பதிவு செய்ய முன்வந்தாலும் காப்பீட்டுத் தொகையைவிட கூடுதலாக சேவை கட்டணமாக பல மடங்கு பணம் கேட்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களிலும், பொது இ-சேவை மையங்களிலும் பயிர்காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்.

 

காப்பீடு செய்வதற்கான தேதி ஜூலை 31-க்குள் முடிவடைவதால் கால அவகாசம் போதாது. எனவே, காப்பீடு செய்வதற்கான கால அளவையும் நீட்டித்து உத்தரவு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளையும், விவசாய அமைப்புகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்