தமிழ்த்திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்பால் சென்னை இன்று காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்ன ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது கிரேசியின் நண்பர் நடிகர் கமல்ஹாசன் அருகில் இருந்தார். சிகிச்சை பலனின்றி கிரேசி உயிரிழந்த பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல்:

’’நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில்மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லெளகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர். ‘’கிரேசி’’என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் ‘’நகைச்சுவை ஞானி’’. அவரது திறமைகளை அவர் குறைத்துகொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக்காட்டிக்கொண்டார் என்பது தான் உண்மை.

பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர். அந்த நல்ல நட்பின் அடையாளமாக இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றி்யில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.
நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன். - அன்புடன் கமல்ஹாசன்.’’

கமல்ஹாசன் மூலமாகவே திரையுலகிற்கு வந்த கிரேசி, அபூர்வ சகோதரர்கள், சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதி அப்படங்களில் நடிக்கவும் செய்தார்.