
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.