கமல்ஹாசனின் பரப்புரைக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில் கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் கூறியிருந்தார்.
இந்த சர்ச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை அவரச வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கமலஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்கும்படியும் அதனை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். நீதிபதிகள் நிஷா பானு தண்டபாணி அமர்வில் இந்த முறையீடு வைக்கப்பட்டது.
பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பேசி வருகிறார். ஆகவே அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, பிரச்சாரத்திற்கு தடை விதிக்கலாமா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் எனவே இந்த வழக்கை அவரச வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என கூறி முறையீட்டை நிராகரித்தனர்.