திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்மணி தோறும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து கிரிவலம் செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்து அண்ணாமலையார் – உண்ணாமலையம்மனை வணங்கிவிட்டு செல்கின்றனர்.
கோயிலுக்குள் சுவாமிகளை வணங்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்னு கட்டணம்மில்லா பொது தரிசனம், அடுத்ததாக ஒருவருக்கு 50 ரூபாய் என்கிற கட்டண தரிசனம். பக்தர்கள் தங்கள் வசதிக்கு தகுந்தார்போல் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதன்படி தரிசனம் செய்வார்கள். இதில் கட்டண தரிசனத்தில் மோசடி நடந்துயிருப்பதாக குற்றம்சாட்டி யானை பராமரிப்பாளர் சிங்காரம், இரவு காவலர் பிரேம்குமார் என்கிற இரண்டு தொகுப்பூதிய பணியாளர்களை தற்காலிகமாக நீக்கியுள்ளார் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்.
கோயில் யானை ருக்கு இறந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. அதனால் யானை பராமரிப்பாளராக இருந்த சிங்காரத்தை வேறு பணிகளில் பயன்படுத்திவந்துள்ளனர். அப்படித்தான் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கட்டண மையத்தில் பணியில் இருந்தபோது, கட்டண தரிசனம் செல்லும் பக்தர்களிடம் தலைக்கு 50 ரூபாய் என பணம் வாங்கிக்கொண்டு அதற்கான ரசீது தராமல் அனுப்பியதை ஆய்வின்போது கண்டறிந்து விசாரணை நடத்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்கிறார்கள்.
இதுப்பற்றி கோயில் பணியாளர்களிடம் விசாரித்தபோது இன்னும் சில தகவல்களை கூறுகின்றனர். கட்டண ரசீது வழங்கும் இடத்தில் யார் அமர்வது என்பதை கோயில் மணியக்காரர், கண்காணிப்பாளர், மேலாளர் இணைந்து தான் முடிவெடுத்துள்ளார்கள். சிங்காரம் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய்யை ஏமாற்றினார்கள் எனச்சொல்கிறார்களோ, அதை விட அதிக பங்கு கோயிலில் உள்ள நிரந்தர பணியாளர்கள், அதிகாரிகள் வேறு சிலருக்கு உள்ளது. அவர்கள் தான் இப்படிப்பட்ட போர்ஜரி வேலையை செய்து பணத்தை கொள்ளையடித்துவர்கள், விவகாரம் பெரியதாக ஆனதும் இவர்களை சிக்கவைத்துவிட்டு அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். இரவு காவலாளி பிரேம்குமார் எப்படி பகலில் வந்து கட்டணம் வசூலிக்கும் அறையில் அமர்ந்தார் என்கிற கேள்வி எழுகிறது.
அதேபோல், ரசீது வழங்கினார்களா இல்லையா என்பதை கண்காணிக்க நுழைவாயிலில் ஒரு பணியாளர் இருப்பார். அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணியை சரியாக செய்யாத அவரும் தானே குற்றவாளி என கேள்வி எழுப்புகின்றனர்.
பக்தகளுக்கு வழங்கிய கட்டண ரசீதில் மட்டும் மோசடி நடத்தி பணத்தை கொள்ளையடிக்கவில்லை. பலப்பல மோசடிகள் நடத்தி கோயில் வருமானத்தை கொள்ளையடிக்கிறார்கள். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்கள் வாங்குவதில், பக்தர்களிடம் நிதி வாங்குவதிலும் பெரும் மோசடி நடைபெறுகிறது. அதை விட முக்கியம் 100 பேருக்கு அன்னதானம் எனச்சொல்லிவிட்டு 50 பேர்க்கு தான் போடுகின்றனர். இதில் மற்றொரு கூத்து என்னவென்றால், அதற்கான டோக்கனை கூட 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதில் முக்கிய பங்கு கோயிலில் உள்ள முருகனின் மற்றொரு பெயர் கொண்ட அதிகாரிக்கு செல்கிறது.
அதுமட்டும்மல்ல கோயில் எதிரே பலரும் தேங்காய்கடை, பூ கடை என வைத்துள்ளனர். இவர்களிடம் கோயிலின் முன்னால் பணியாளரும், தற்போது ஆளும்கட்சியின் சப்போட்டில் உள்ளவரான அந்த நபர், கோயில் முன் கடை வைத்துள்ளவர்களிடம், நீங்க இங்க கடை வைக்கனும்ன்னா அட்வான்ஸ் தரனும், கடையை காலி செய்யறப்ப அதை திருப்பி தந்துவிடுவன். தரமாட்டன்னு சொன்னா உங்களை இங்கயிருந்து காலி செய்யவச்சிடுவன் என்னோட ஆளும்கட்சி பவர் தெரியும் தானே என மிரட்ட ஒவ்வொருவரும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அட்வான்ஸ் தந்துள்ளனர். அந்த பணத்தை வாங்கி ராசி வட்டிக்கு வெளியே கடன் தந்துள்ளார் அந்த நபர். பணம் தந்தவர்கள் சிலர் தங்களது தேவைக்காக பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். பணத்தை நான் தரும்போது தருவன், பணத்தை தாங்கன்னு நச்சரிச்சி, உங்களை இங்க கடை வைக்கவிடமாட்டன் எனச்சொல்லியுள்ளார். அப்படி சொல்லியும் அந்த வியாபாரிகள் பணத்தை கேட்க, இரண்டு இரும்பு கேட்களை போட்டு அவர்களது வியாபாரத்தை முடக்கியுள்ளார். கோயிலில் உள்ள இந்த இணை ஆணையரும் எதுக்கு அங்க இரண்டு கம்பி தடுப்பு என கேட்கவில்லை என்கிறார்கள்.
அதேபோல், கோயில் எங்களுக்கே சொந்தம் என்கிற ரீதியில் செயல்படும் முக்கிய சிவாச்சாரியர்கள் குடும்பத்தின் இளைஞன், ஒரு விஐபி குடும்பம் வந்தால் அமர்வு தரிசனம் செய்யவைக்க 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாங்குகிறான். அந்த பையன், 5 பேர் வந்தால் 2 பேர்க்கு மட்டும்மே சிறப்பு தரிசன ரசீது வாங்கிக்கொண்டு உள்ளே அழைத்து செல்கிறான். இதுப்பற்றி தெரிந்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்புவதில்லை. காரணம் அவர்களுக்கு பங்கு போய்விடுகிறது.
இரண்டு ஆண்டுக்கு முன்பு மகாதீபத்துக்கே கோயிலில் பூ அலங்காரம் செய்யவந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டி அவர் அலங்காரம் செய்யாமல் போய்விட்டார். இத்தனைக்கும் அவர் இலவசமாக தான் வருடாவருடம் பூ அலங்காரம் செய்துவந்தார். கோயில் அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் செய்ததாக பணம் எடுத்துக்கொண்டுயிருந்தார்கள். இப்போது கூட கார்த்திகை தீபத்திருவிழா பணிகள் தொடங்கியுள்ளது. கோயில் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு இந்த செலவை நீங்க ஏத்துக்குங்க அப்படின்னு சொல்லி ஒரு கும்பல் விஐபி பக்தர்களிடம் பணத்தை வசூலித்து வருகிறது. உண்மையில் இந்த தொகையெல்லாம் கோயில் கணக்கில் வருவதேயில்லை.
இப்படி கோயிலை வைத்து கொள்ளையடித்தபடியே இருக்கிறார்கள் சில கோயில் பணியாளர்கள், அதிகாரிகள், சிவாச்சாரிகள் இதனை கண்டுக்கொள்ளாமல் கண் துடைப்புக்காக இப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக்காட்டுகிறார்கள் என்றார்கள்.
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். இவர்கள் விட்டால் சிவன் சொத்துக்களை மட்டும்மல்ல சிவானான அண்ணாமலையாரையே விற்பனை செய்துவிடுவார்கள்.