"ஆனியன் ஊத்தப்பம் சாப்பிடுங்க...கொரோனா வைரஸ் வராதுங்க" என "கிடைக்கின்ற கேப்பில் கிடா வெட்டுவாங்க" என்கின்ற வட்டார வழக்கு சொல்லை மெய்ப்பித்திருக்கின்றார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்.
விலங்கில் இருந்த வைரஸ் மூலம் மனிதனுக்கு பரவியதாகவும், தொடக்கத்தில் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டதாகவும் மனிதர்களை கொல்லும் அந்த வைரஸிற்கு கொரோனா (2019-nCoV ) என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவசரமாக உலகளவில் அறிவிக்கப்பட்டது.
அதன் பின் எங்குப் பார்த்தாலும் கொரோனா வைரஸ் பேச்சுத்தான். தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்தாலும் சத்தான சாப்பாடு, நல்ல குடி தண்ணீர் இவைகளைப் பயன்படுத்துவதாலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதாலும் இந்தியாவில் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்றனர்.
இவ்வேளையில், "சின்ன வெங்காயம் ஊத்தப்பம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிக்காது." என்பது போல் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காயம் ஊத்தப்பம் சாப்பிடுங்க." என வாசலிலேயே போர்டு மாட்டு வாடிக்கையாளர்களை அழைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவர். எனினும், இவ்விளம்பரம் மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டினாலும் சின்னவெங்காயம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிக்காது என்பது இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை.