Skip to main content

கடலோர காவல்படை கடலில் மூழ்கி இறப்பவர்களை  மீட்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கிறது?

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
sea

 

சென்னையை சேர்ந்த கோட்டீஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் " நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், வார இறுதி நாட்கள்,  விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில்  நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் ஆழம் தெரியாத நீர் நிலைகள், பயன்பாடு முடிவடைந்த கல்குவாரிகள் போன்றவற்றை வேடிக்கை பார்க்க செல்வதாலும், குளிக்க செல்லும் போதும் நீரில் மூழ்குவதும் அதிகரித்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ஆழம் தெரியாத பகுதிகளில் செல்பி எடுக்க சென்று தவறி விழுந்து நீரில் மூழ்குவதும் அதிகரித்து வருவதாகவும், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி  கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884 பேராக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இது போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகவும் அதிர்ச்சியானதாக இருப்பதாகவும், இதே போல் கடல் சீற்றம் மற்றும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எதுவும் வழங்கப்படவில்லை " என  குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மேலும் சுற்றுலா தலங்கள்,  கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க  வேண்டும், நெடுஞ்சாலைகளில் உள்ள நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்புகளை அமைக்க வேண்டும்"  என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அமர்வில் விசாரனைக்கு வந்தது , கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க காவல்துறையில் நீச்சல் தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்துவது அல்லது நீச்சல் தெரிந்த வீரர்கள் அடங்கிய  குழு அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்ரு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், கடல், கோவில் குளம், சுற்றுலா தளங்களில் உள்ள நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க அப்பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் அந்த நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை நீர் நிலைகள் மற்றும் கடலில் மூழ்கி இறந்தவர்கள் எண்ணிக்கை விவரங்களையும்  பதில் மனுவாக 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்

 

மேலும் இந்திய கடலோர காவல்படை கடலில் மூழ்கி இறப்பவர்களை  மீட்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை  ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்