கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மத்திய அரசு இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது அது இன்றோடு மூன்று நாள் கடந்துள்ளது. இந்த நிலையில் மிகவும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருவோர் மீது போலீசார் அத்துமீறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. முக்கிய இடங்களில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் வருவோரை தடுத்து நிறுத்துவதோடு அவர்களை சாட்டையாளும் தடியாலும் அடிப்பது, மேலும் அவர்களுக்கு தண்டனை என்ற பெயரில் தோப்புக்கரணம் போட செய்வது இப்படி சட்ட விதி மீறல்களை போலீசார் செய்வதாக மனித உரிமை அமைப்பினர் புகார் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை சிக்னலில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்கும் போதே சாட்டையால் அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் சிறிது தூரம் வந்த பிறகு நம்மிடம் பேசினார். அப்போது, "சார் ரொம்ப அடிக்கிறாங்க சார்... நாங்க எதுக்காக வருகிறோம்..? 10 பேர் வண்டியில வர்றாங்க அதுல குறைந்தது எட்டு பேர் ரொம்ப தேவையான விஷயத்துக்காகத்தான் வராங்க. திமிரு புடிச்ச பசங்கள கண்டுபிடித்து அடிக்கிறது பத்தி பிரச்சனையே இல்லை. ஆனால் என்னோட அப்பா, அம்மா இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தள்ளி தனியாக இருக்காங்க. அவங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லை. வீட்டுல செஞ்சு கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறேன். அதை சொல்வதற்கு கூட பேச விடாமல் அடிக்கிறாங்க. இன்றைக்கு மட்டும் இல்ல, மூன்று நாளா அடிச்சுகிட்டேதான் இருக்காங்க. இன்னும் 18 நாள் இருக்கிறது. எப்படி இதை தாண்டுவோம் என்று தெரியவில்லை.
நாங்க அரசாங்கத்துக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை. வீட்டில் தான் இருக்கிறோம். ஆனால் சாப்பாட்டுக்கு வழி ஒன்றுமில்லாமல் பெரியவங்க கஷ்டப்படுவாங்க, அதை ஏன் காவல்துறையினர் புரிஞ்சுக்கமாட்டுக்காங்க. முதலில் அடித்து விட்டுத்தான் விசாரிக்கிறார்கள். ரொம்ப கஷ்டமா இருக்கு சார். இன்னும் 18 நாள் எப்படி போக போகிறது என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார் அந்த இளைஞர்.