கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நானே வல்லரசு என்று மார்தட்டிய அமெரிக்கா முதல், முன்பு இந்தியாவை தனது காலனி ஆதிக்கத்தில் அடிமைப்படுத்திய இங்கிலாந்து வரை தனது கோர முகத்தை காட்டி உயிர்களை பறித்து வருகிறது கரோனா.

இதில் இந்தியா மிகப்பெரிய எச்சரிக்கையுடன் தனது அனைத்து நகர்வுகளையும் நடத்திவருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தாக்கம் சமூக பரவலாக தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் அது நிகழவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் இதில் தீவிரமான கவனம் செலுத்தி வந்ததுதான். குறிப்பாக தமிழகத்தில் இதன் தாக்கம் தொடங்கியவுடன் மாநில அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் இதை எதிர் கொண்டார்கள்.
ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து ஒரு போராக நடத்திவருகிறது. ஆகவேதான் தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் கூடினாலும் பாதிப்பில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு இந்த வைரஸ் தொற்று வந்ததற்கான காரணம் வெளி மாநிலம் சென்று வந்தவர்களும், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களும்தான். இதை மாவட்ட நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால் அதற்குத் தேவையான எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பணியாற்றியது.

இந்த வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமல் இருக்க அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இரு துறைகளும் செய்து வந்தன. இதன் காரணமாகவே தொடக்கத்தில் வந்த எண்ணிக்கையைப் போல் தற்போதும் அது கூடாமல் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் 32 பேர் என்ற அளவிலேயே தற்போதும் நீடித்து வருகிறது. இதில் பலபேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் சிலர் குணமான நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது. இதற்கிடையில் ஈரோடு மாவட்ட மக்கள் உணவுப் பொருள்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்குவதற்கு இந்த மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளதா என சோதித்துப் பார்ப்பதற்காக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இன்று ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வு நடவடிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீடித்தால், மக்களின் தேவைகளுக்கு உணவுப் பொருட்கள் இங்கு இருப்பு உள்ளதா, இல்லை வேறு பகுதியிலிருந்து வரவழைக்க வேண்டுமா என்பதற்கான ஆய்வுதான் இது என்கிறார்கள் அதிகாரிகள். மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதையே அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று அரசு பணியாளர்கள் கூறுகிறார்கள்.