சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., குரங்கு அம்மை, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடத்தில் கரோனா கிளஸ்டர் உருவாகிறது. சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது. BA 4 தொற்று உறுதியான நிலையில், சென்னையில் மக்கள் கவனக் குறைவாக உள்ளனர். பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து பின்பற்ற வேண்டும். ஒமிக்ரான் வகையில் பல உட்பிரிவு வகை உள்ளதால் மக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, மாணவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியான நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்ற மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.