ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் முதல் கடைநிலை உழியர்கள் வரை விடாமல் துரத்துகிறது கரோனா வைரஸ். தொடக்கத்தில் உடனே கட்டுப்படுத்தப்பட்ட ஈரோடு மாவட்டத்தில், தற்போது இரண்டாவது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மாநகர்ப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வயது பேதமின்றி அனைவரையும் வைரஸ் தாக்கி வருகிறது. சமீபகாலமாக மாவட்டத்தில் வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை என்பது தினமும் சதமடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேலும் 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர்ப் பகுதியில் மட்டும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,396 ஆக உயர்ந்து உள்ளது. அதேநேரத்தில் நேற்று சிகிச்சை முடிந்து குணமாகி 81 பேர் வீடு திரும்பினார்.
இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 1,065 பேர் உள்ளனர். நேற்று பவானியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதித்தவர்களுக்கு தற்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள திருமண மண்டபம், அந்தியூர் தாளவாடியில் உள்ள தனியார் பள்ளிகள் போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சித்தோடு பொறியியல் கல்லூரி, திண்டலில் உள்ள தனியார் பள்ளி ஆகிய இடங்களில் தலா 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் நேற்று வரை ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 236 பி.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் ஈரோட்டில் 102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாவட்ட மக்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.