கொடூர கரோனா வைரஸிடமிருந்து ஈரோடு தன்னை பாதுகாத்துக் கொண்டு வருகிறது என்ற ஆறுதல் செய்தி வந்த ஒரே நாளில் திடீரென எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 56 ஆக உயர்ந்துள்ளது. இது ஈரோடு மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தொடக்கத்தில் இருந்த எண்ணிக்கை கூடாமல் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென 9ஆம் தேதி மாலை மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று ஈரோட்டில் உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு எப்படி கூடியது என்று ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் சவுண்டம்மாள் நம்மிடம் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் 28 பேர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அவர்கள் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களிடம் இந்த வைரஸ் தொற்று இதுவரை ஏற்படவில்லை.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த வைரஸ் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் 83 பேரிடம் நாங்கள் ரத்தப் பரிசோதனை செய்தோம். அந்த 83 பேரில்தான் இப்போது 26 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குடும்பத்தினர்தான் அவர்கள். ஆகவே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான அந்த குடும்ப நபர்கள் 26 பேரும் இன்று முதல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அனைவரும் தற்போதுவரை நலமாகதான் உள்ளார்கள். ஏற்கனவே கரோனா வைரஸ் உறுதியானவர்கள் குடும்பத்தினர்தான் இப்போது வந்துள்ள கூடுதல் எண்ணிக்கை என்பதாகும்" என கூறினார்.
கரோனா வைரஸ் தொற்று என்பது ஈரோட்டில் எந்த புதிய நபர்களுக்கும் ஏற்படவில்லை. தாய்லாந்திலிருந்து வந்த 7 பேர் மூலமும், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்காக ஈரோட்டிலிருந்து சென்ற 40க்கும் மேற்பட்டோர் என கரோனா வைரஸ் தொற்று இவர்களுக்குள்ளேயே சுற்றி வருகிறது. அந்த மாநாட்டை முடித்து ஈரோடு வந்த இரண்டே நாட்களில் அவர்கள் கண்டறியப்பட்டு, உடனே தனிமைப்படுத்தப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அப்படிப்பட்ட அந்த நபர்கள், அவரவர் வீட்டில் இருந்தது இரண்டு நாட்கள்தான். அந்த இரண்டு நாட்களிலேயே அவர்களின் குடும்பத்தினரை கரோனா வைரஸ் பலமாக தொற்றி பிடித்துக்கொண்டது. ஏற்கனவே இக்குடும்பத்தினர் தனிமைபடுத்தித்தான் வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இப்போது தொற்றுக்குள்ளானவர்களின் தொடர்புகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. ஆக ஈரோட்டில் இதன் எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றாலும், சமூக பரவல் என்கிற மூன்றாம் நிலைக்கு இந்த நிமிடம் வரை ஈரோடு வரவில்லை. ஒரு குழுவினர் தொடர்பை தவிர, ஈரோடு தொடர்ந்து பாதுகாப்பாகத்தான் உள்ளது என நம்பிக்கையுடன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.