கடவுள் மட்டுமா கண்ணுக்கு தெரியாதது நானும்தான் என உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா வைரஸ், மனிதகுலம் அன்றாட வாழ்வில் நகர்ந்து வந்த வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டதுதான் இந்த வைரஸ் தொற்று. குறிப்பாக சடங்குகள் என்பது மனித சமூகத்தில் ஒன்றாக நடந்து வருகிறது. அமாவாசை, ஆடி ஒன்று, ஆடி பதினெட்டு, தைப்பொங்கல், தீபாவளி, சித்திரை ஒன்று என பல்வேறு நிகழ்வுகள் மனித சமூகத்தில் சடங்குகளாகவும், விழாக்களாகவும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதில் ஒன்றுதான் ஆடி அமாவாசை, இந்த தினத்தில் தமிழகத்தில் ஆறுகள் உள்ள இடங்கள் கால்வாய்கள், குளங்கள், நீர்நிலைகள் உள்ள இடங்களில் மக்கள் பல்லாயிரம் பேர் கூடி அவர்களின் பெற்றோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம், ஏறக்குறைய தமிழ்நாடு முழுக்க பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது சடங்குகளை செய்து வந்தார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை அதற்கு காரணம் இந்த வைரஸ் தொற்று தான்.
அரசாங்கம் மக்கள் கூடக்கூடாது நீர்நிலைகளில், கோயில்களில் மக்கள் கூட்டம் எதுவும் கூடாது என தடை போட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த இந்தசடங்குகள் அனைத்தும் நடைபெற முடியாமல் தடுத்து விட்டது கரோனா வைரஸ். குறிப்பாக தமிழகத்தில் இரண்டாவது காசி என்றால் அது பவானி கூடுதுறை. இங்கு ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் ஆனால் இன்று, "யாரும் உள்ளே வராதீர்கள்" என பூட்டு போட்டு விட்டனர் காவல்துறையினர். வேறு வழியில்லாமல் யாரும் அங்கு செல்லவில்லை இதனால் அந்த இடமே களையிழந்து காணப்பட்டது. ஆக மனித மனங்களில் சாமி மற்றும் சடங்குகளின் நம்பிக்கைகளை, உள்ளார்ந்த விஷயங்களை முற்போக்கு பிரச்சாரம் செய்து தடுத்தாலும் நடக்காத அந்த நிகழ்வுகளை இந்த வைரஸ் தொற்று நிறுத்திவிட்டது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.