கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதியில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மண்டல மேலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக், ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், விற்பனை நிலைய மேலாளர் ஜம்புலிங்கம், துணை மண்டல மேலாளர் பிரேம்குமார் மற்றும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு விற்பனை குறித்து நிறுவனத்தின் மண்டல மேலாளர் பேசுகையில், “தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய துணி ரகங்களை இந்திய முழுவதும் உள்ள கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
தற்போது தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை பட்டு, சேலம் பட்டு, காஞ்சிபுரம், ஆரணி திருமண பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுச் சேலைகள். கோவை கோரா காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்டவை புதுவிதமான டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கலப்படம் இல்லாமல் பருத்தியால் செய்யப்பட்ட மெத்தை தலையணை, வேட்டி, சட்டை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 30% வரை தள்ளுபடி உண்டு. அரசு ஊழியர்களுக்குத் தவணை முறையில் கடன் வசதி அளிக்கப்படுகிறது” எனக் கூறினார்.