இளம்வயதிலேயே அதுவும் இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் தமிழக முன்னாள் டி.ஜி.பி மகள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருவதோடு, டெல்லியில் பணி இருப்பதாக அவரது முகநூலிலேயே குறிப்பிட்டுள்ளார். அவர், அப்படி தேர்ச்சிபெறவே இல்லை என்று அதிர்ச்சியூட்டுகிறது ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரம்.
ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறாமலேயே அதுவும் தமிழக முன்னாள் டி.ஜி.பியின் மகள் அப்படி முகநூலில் போட்டுக்கொள்கிறாரா? என்ற ஆச்சர்யத்துடன் நாம் அந்த முகநூல் பக்கத்தில் போய் பார்த்தபோது, “டெல்லியில் மிகவும் பிரபலமான சாணக்கியா ஐ.ஏ.ஸ். அகாடெமியில் படித்ததுபோன்றும் டெல்லி சப்-டிவிஷனில் பணியில் இருப்பதுபோன்றும் அவரது புரஃபைலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் அவரின் பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்ததோடு அவரது அப்பாவின் (முன்னாள் டி.ஜி.பி) புகைப்படங்களும் பகிரப்பட்டிருக்கின்றன.
‘அப்பா டி.ஜி.பி… மகள் அவருக்கும் சேர்த்து உத்தரவிடும் ஐ.ஏ.எஸ். ஒரு தந்தைக்கு இதைவிட ஆகபெரும் கெளரவம் என்னவேண்டும்! பேரும் புகழும் கொண்டு மென் மேலும் மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்’ என்று அவரது பெயரை டேக் செய்து பாராட்டியிருக்கிறார் ஒரு முகநூல் வாசி. ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்று பாராட்டப்பட்டிருக்கிறது. இப்படி, தொடர்ந்து பாராட்டிய பதிவுகளுக்கு அவரால் லைக் போட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது போலவும் உள்ளது. மேலும், ஏ.டி.ஜி.பி. அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டுவதுபோலவும் முகநூலில் உள்ளன.
ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பட்டியலில் முதல் இடத்தில் 249085 என்ற எண்ணுக்கு நேராக அவரது பெயர் குறிப்பிட்ட பட்டியலையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவு செய்து பாராட்டியிருக்கிறார்கள். இது, உண்மைதானா? என்று நாம் அந்த சிவில் சர்வீஸ் நம்பரை வைத்து ஆராய்ந்தபோது 249085 என்பது 2013 ஆம் வருடத்தில் கெளரவ் அகர்வால் என்ற வெளிமாநில மாணவர் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றதற்கான எண் என்பது தெரியவந்தது.
அப்படியென்றால், ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிபெற்றதாகவும் டெல்லியில் பணியில் இருப்பதாகவும் முன்னாள் டி.ஜி.பி மகளின் முகநூலில் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து அவரது தரப்பில் விசாரித்தபோது, “அவரது மகளின் புகைப்படங்களை வைத்து போலியான முகநூல் கணக்கை தொடங்கி, யாரோ இப்படி தவறான தகவல்களை பதிவு செய்துவருகிறார்கள். சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆராய்ந்தால் அதன் ஐ.பி. அட்ரஸ் வெளிநாட்டில் இருப்பதாக காண்பிக்கிறது. அதனால், கண்டுபிடிப்பதில் சிரமமாக உள்ளது. யார் இப்படி செய்தார்கள் என்பதை விசாரித்துவருகிறது போலீஸ்”என்றார்கள்.
பலநாட்களாக இந்த முகநூல் கணக்கு உள்ளது. இப்போதும், அந்த முகநூல் கணக்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு முன்னாள் டி.ஜி.பியின் மகளின் பெயரில் தொடங்கப்பட்ட முகநூல் பக்கமே யாரால் தொடங்கப்பட்டது என்று தமிழக போலீஸாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் சாதாரணமானவர்களின் பெண் பிள்ளைகள் குறித்து போலிக்கணக்குகள் தொடங்கி பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள்? என்பது பொதுமக்களின் கேள்வி.