தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு பதவியேற்ற பிறகு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு பழைய ரவுடிகளில் ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து ரவுடியிசத்தில் ஈடுபட்டுவந்த பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருந்தியுள்ள ரவுடிகளிடம் இனிமேல் எந்த சூழ்நிலையிலும் ஆயுதம் எடுக்கக் கூடாது. நீங்கள் ஆயுதம் தூக்கும்போது உங்கள் குடும்பங்களும் தவிக்கும் என்று அறிவுரைகள் சொல்லி மீண்டும் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில்தான் தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாகவே அரிவாள் தூக்கிக்கொண்டு கூலிப்படையாகச் செல்லும் பலரையும் போலீசார் தனியாக அழைத்துத் திருந்தச் சொன்னார்கள். பலர் திருந்தினாலும் சிலர் திருந்தவில்லை.
கடந்த மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பாலாவுக்கு திடீரென கால் உடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கடந்த வாரம் பட்டுக்கோட்டை மைனர் பங்களா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் அரிவாளைக் காட்டி போதைக்காக மாத்திரைகளைப் பெட்டியோடு அள்ளிச் சென்ற பண்ணவயல் ஹரிகரன், பட்டுக்கோட்டை ராஜஷ் ஆகியோர் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் பட்டுக்கோட்டை போலீசார் அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்கும்போது பாலத்திலிருந்து தவறி விழுந்து கால், கை உடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகும் இன்னும் சிலர் திருந்தவில்லை.
நேற்று (13.10.2021) புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை தங்கவேல் நகர்ப் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் முத்துக்குமார், சூரப்பள்ளம் சாலையில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் எலக்ட்ரிக் வேலைகள் செய்துவிட்டு கடைக்கு வந்து டீ குடித்துவிட்டுச் செல்லும்போது அந்தப் பக்கம் பைக்கில் சென்ற தங்கவேல் நகரைச் சேர்ந்த சுரேந்தர், பவிக்குமார் உள்ளிட்டோர் முத்துக்குமாரை தள்ளிவிட, முத்துக்குமார் எதிர்த்துக் கேட்டுள்ளார். போதையிலிருந்த இருவரும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் காட்சிகளை ஒருவர் செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்துள்ளார். வீடியோ எடுத்தவரையும் மிரட்டிவிட்டுச் சென்றது அந்த கும்பல்.
இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை ரவுடி விங்க் போலீசார் தர்மாவுக்கு தகவல் வர, போலீஸ்காரர் தர்மா டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் தகவலளித்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் கடந்த மாதம் தனி ஆளாகக் கடத்தல் காரை விரட்டிப்பிடித்த டி.எஸ்.பி ஜீப் ஓட்டுநர் பிரசாத், பாவேந்தன் உள்ளிட்ட சில போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது ரகளை செய்தவர்கள் தப்பிச் சென்றனர். அவர்கள் பதுங்கியுள்ள இடத்திற்கு போலீசார் சென்றபோது சுரேந்தர், பவக்குமார் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு கால் உடைந்துவிட்டதாகக் கூறி போலீசார் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சுரேந்தர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் உள்ளன. இப்படி பட்டுக்கோட்டை நகரில் தொடர்ந்து ரவுடியிசத்தில் ஈடுபடுவோர் கை, கால்கள் உடைவது வழக்கமாக உள்ளதால் மற்றவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.