Skip to main content

பள்ளிக் கல்வித்துறையில் கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடுகள்... இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது..!   

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Computer Teachers Selection Irregularities in School Education: 742 Teachers Appointment Bound to Final Judgment!

 

தமிழக பள்ளிக் கல்வித்துறையில், 814 கணிப்பொறி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், 742 ஆசிரியர்கள் நியமனம், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 814 கணிப்பொறி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, 2019 ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. தமிழகம் முழுவதும் 175 மையங்களில் நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் மொபைல் ஃபோன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், 3 மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, இப்பணிக்கான தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்குப் பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்தும், அதேசமயம் மூன்று தேர்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டார்.

 

இந்நிலையில், அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

Computer Teachers Selection Irregularities in School Education: 742 Teachers Appointment Bound to Final Judgment!

 

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவின்படி, 742 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கையைப் பார்த்தபின் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரினார். இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, கணிப்பொறி ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அனைத்து மையங்களுக்கும் சேர்த்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உதவியாக அரசியல் சார்பில்லாத ஓய்வுபெற்ற டிஐஜி அதிகாரியை இணைத்துக்கொண்டு விசாரணை நடத்தி, ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனி நீதிபதி முன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

விசாரணையின்போது, அனைத்து தேர்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பெறலாம் என்றும், பதிவுகள் இல்லாத பட்சத்தில் தேர்வு எழுதியவர்களை அழைத்து விசாரிக்கலாம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் நியமனம், தனி நீதிபதியின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தது.

 

சார்ந்த செய்திகள்