மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணத் தொகைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
கடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவனையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. முதல் தவனையை வழங்குவதற்கு நில உரிமையளர்களின் கணினி சிட்டா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், உள்ளிட்ட ஆவணங்களை பிப்ரவரி .15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அவசர, அவசரமாக வினியோகித்து வாக்குகளைத் கவரும் தந்திரம் இதில் அடங்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில் கணினி சிட்டா கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கணினி சிட்டா பதிவிறக்கம் செய்யப்படுவதால் நெட்வொர்க் பிரச்சினை உள்ளது. இதனால், மக்கள் பல மணி நேரங்களாக கணினி மையங்களில் காத்திருக்கின்றனர். இதனால், பல விவசாயிகள் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
அதே போல ஒவ்வொரு கிராமத்திலும் பல விவசாயிகள் வங்கி கணக்கு இல்லாமல் உள்ளதால் தற்போது அவசரமாக வங்கிகளில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அதனால் வங்கி பணிகளும் முடங்கியுள்ளதால் கணக்கு தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆவணங்களை சமர்பிக்க முடியாத விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். மேலும், இதையொட்டி ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் ஆவணங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.