Skip to main content

“சேலம் இரும்பாலை வர அந்தப் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது..” - ராமதாஸ்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

"The sacrifices made by the people of that area to bring Salem iron company is immeasurable.." - Ramadoss

 

“சேலம் இரும்பாலை தமிழ்நாட்டின் அடையாளம், அது தமிழ்நாட்டின் பெருமை. அந்த இரும்பாலை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக சேலம் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது. அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஒரு ஏக்கர் ரூ.5,000க்கும் குறைவான விலையில் கொடுத்ததால் தான் சேலம் இரும்பாலை உருவானது” என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

மேலும், அதில் அவர், “சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று நம்புவதாகவும் மத்திய எஃகு உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்டுவதற்குப் பதிலாக அதை விற்பனை செய்ய மத்திய அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.

 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி. மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத்துறை அமைச்சகமும் இதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக முதலீட்டாளர்களை இரும்பாலைக்கு அழைத்துச் செல்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அதற்கான பாதுகாப்புச் சூழலை மாநில அரசு ஏற்படுத்தித் தரவில்லை. ஆனாலும் அதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது ஜனவரி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் நிகழும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதையே அமைச்சர் சிந்தியாவின் பதில் உணர்த்துகிறது.

 

இந்திய இரும்பு எஃகு நிறுவனத்திற்குச் சொந்தமான சேலம் இரும்பாலையை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், எவரும் ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதன்பின் கொரோனா காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவற்றை மத்திய அரசு  மீண்டும் தொடங்கியுள்ளது.

 

சேலம் இரும்பாலை தமிழ்நாட்டின் அடையாளம், அது தமிழ்நாட்டின் பெருமை. அந்த இரும்பாலை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக சேலம் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது. அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஒரு ஏக்கர் ரூ.5,000க்கும் குறைவான விலையில் கொடுத்ததால் தான் சேலம் இரும்பாலை உருவானது. இத்தகைய பின்னணி கொண்ட சேலம் இரும்பாலையை உலகத்தரம் கொண்ட ஆலையாக தரம் உயர்த்துவது தான் அந்த ஆலை அமைவதற்காக சேலம் மக்கள் செய்த தியாகங்களுக்கு மத்திய அரசு செய்யும் பதிலுதவியாகும்.

 

சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பாகச் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும். அந்த நோக்கத்துடன் தான் சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்தும்படி கடந்த 17 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசு, “நவீன மயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் செயில் நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்தும், 5 ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் தான் ஆலையை தனியார் மயமாக்க அரசு தீர்மானித்திருக்கிறது” என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறது.

 

சேலம் இரும்பாலையை நவீனமயமாக்கி புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூட, அதை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், அந்த ஆலைக்குச் சொந்தமான 4000 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பது தான். மத்திய அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது; அதை தமிழகம் அனுமதிக்காது.

 

சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்புக்கு உலகின் பல நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பான முறையில் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும். இதை உணர்ந்து கொண்டு சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்டி இந்திய இரும்பு எஃகு நிறுவனத்தின் (செயில்) மூலம் பொதுத்துறை நிறுவனமாகவே நடத்த வேண்டும்.

 

ஒருவேளை சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாது என்றால், அந்த ஆலை அமைந்துள்ள 4000 ஏக்கர் நிலங்களையும் அவற்றை வழங்கிய நில உரிமையாளர்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.