தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இந்த அமைப்பு வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.
அரசு நிர்வாகத்தில் மக்களோடு கடைமட்டமாக நேரடி தொடர்பு உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். இவர்கள் பணியாற்றும் கிராம அலுவலர்கள் அந்த கிராமத்திலே தங்கியிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள் ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலும் கிராம அலுவலர்கள் தங்குவதில்லை என்கிற குற்றசாட்டு அடிக்கடி வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார் மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் நேர்முக உதவியாளரிடம் (பொது) அளிக்கலாம். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார்களை ஒரு துணை கலெக்டர் தலைமையில் இரண்டு தாசில்தார் நிலை அலுவலர்களைக் கொண்டு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி துணை ஆட்சியரான கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது), கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) தாசில்தார், கூடுதல் வரவேற்பு தாசில்தார் ஆகியோர் குழுவில் இடம் பெறுவர். திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார் மனுக்களை பொதுமக்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கலெக்டர் அலுவலகம், திருச்சி என்ற முகவரியில் அளிக்குமாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.