கூட்டுறவு சங்கத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக அதிமுக பிரமுகர் மீது தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி லலிதா. இவர்கள் இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடக்கும் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு நேற்று (டிச. 27, 2021) வந்திருந்தனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த அவர்கள் இருவரும், பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இதைப்பார்த்துவிட்ட ஆட்சியர் கார்மேகம், அவர்களை எச்சரித்தார். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது தம்பதியினர் ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது; ‘கடந்த 2015ம் ஆண்டு, வாழப்பாடியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக இருந்தது. அந்த வேலையை பெறுவதற்காக எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலம், அப்போது சேலம் பள்ளப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த அரியானூர் பழனிசாமி என்ற அதிமுக பிரமுகரிடம் சிபாரிசுக்காக அணுகினோம்.
அப்போது அவர், கண்காணிப்பாளர் வேலை வாங்கித் தர வேண்டுமானால் 6 லட்சம் ரூபாய் செலவாகும் எனக்கூறி, எங்களிடம் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால், சொன்னபடி அவர் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் பணத்தைத் திருப்பிக் கேட்டோம். அவரோ பணத்தைத் தர மறுத்துவிட்டதோடு, எங்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது உரிய விசாரணை நடத்தி, எங்களுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்.’ இவ்வாறு அவர்கள் புகார் மனுவில் கூறியுள்ளனர்.
இதையடுத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அவர்களின் புகார் மனு மீது காவல்துறை மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, மனுவைப் பெற்றுக் கொண்டார்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அரியானூர் பழனிசாமி மீது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சேலம், நாமக்கல் மாவட்ட காவல்துறையில் சிலர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.