வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்த கோட்டை ஊராட்சியில் செக்குமேடு என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு என திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் லத்தீப் ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2000ம் ஆண்டு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் ஒரு சமுதாய கூடம் கட்ட நிதி ஒதுக்கினர்.
அந்த சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. அதனை அப்போதைய அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். கட்டிமுடிக்கப்பட்ட அந்த சமுதாய கூடத்தை தனிநபர் ஒருவர் 19 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்துள்ளார். இதுப்பற்றி பலப்பல புகார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் முதல்வர் வரை சென்றும் யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் புகார்கள் வந்ததோடு, அதுப்பற்றிய தகவல்கள் சமூக வளைத்தளங்களில் பரவியது. அந்த புகாரின்பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய்த்துறையினர், அந்த கிராமத்திற்கு சென்று தனி நபரின் ஆக்கிரமிப்பில் இருந்த சமுதாய கூடத்திற்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுப்பற்றி விசாரணை நடத்திவிட்டு அதன்பின் இதனை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.