கோவையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், திரைப்பட நடிகர் விவேக் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிரீன் கலாம் திட்டம் மூலம் கடந்த 8 வருடமாக கல்லூரி, பள்ளிகளில் மரம் நடும் பணியை செய்து வருகிறேன். தமிழகத்தில் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்ற என் இலக்கில் தற்போது வரை 29.3 லட்சம் மரம் நடப்பட்டுள்ளது. இந்த மரங்கள் பொது இடங்களில் வைக்காமல் கல்லூரி, பள்ளிகளில் வைத்து உள்ளதால் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெரிய கல்வி நிறுவனங்கள் உதவி கிடைத்தால் ஒரு கோடி மரங்கள் நடும் என் இலக்கை அடைய முடியும். இன்று நான் நட்டு வைத்த மரக்கன்றுக்கு கலாம் என பெயர் வைத்துள்ளேன்.
சினிமா தொடா்பான பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சினிமாவை மட்டும் நம்பி வாழும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய திரைப்படம் வெளியாகாத காரணத்தினால் தயாரிப்பாளர், ரசிகர்கள், சினிமா விமர்சனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையதளத்தில் படம் வந்தவுடன் விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். சினிமா துறை நலிவடைந்துள்ளது. வரியை குறைக்க வேண்டும். நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும். தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் உள்ள பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயமும், சினிமா துறையும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.